இந்த ஆட்டோ ஓட்டுநரை நாடும் முன்னணி நிறுவனங்கள்

இந்த ஆட்டோ ஓட்டுநரை நாடும் முன்னணி நிறுவனங்கள்

2 mins read

"நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்," எனும் ரஜினியின் 'பாஷா' திரைப்படத்தின் பாடல்வரிகள் நாம் அறிந்ததே.

ஆனால், சென்னையில் உள்ள ஷேர் ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரையின் கதையைப் படித்த பிறகு, "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச சேவைக்காரன்," எனும் பாடல்வரிகள் பொருத்தமானதாக உள்ளன.

இவரது ஆட்டோவில் உள்ள வசதிகளை அறிந்தால், இதில் ஏறி பயணம் செய்ய மக்கள் வரிசைக்கட்டி நிற்பர் என்பது திண்ணம்.

இலவச வைஃபை இணைய வசதி, செய்தித்தாள்கள், வார இதழ்கள், கைக்கணினிகள், தொலைக்காட்சி என பயணிகளைக் கவர சகல வசதிகளையும் கொண்டுள்ளார் அண்ணாதுரை. ஆட்டோவில் சிறிய குளர்சாதனப் பெட்டியும் சாக்லட்டுகளும் இவர் வைத்துள்ளார்.

-

மேலும், இவரது ஆட்டோவில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

பயணிகளுக்காக ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருந்த காலம் போய், அண்ணாதுரையின் ஆட்டோவில்தான் செல்லவேண்டும் என பயணிகள் பலர் காத்திருக்கும் நிலை இன்று வழக்கமாகிவிட்டது.

அண்ணாதுரை படித்தது 12வது வகுப்புவரை மட்டுமே. ஆனால், ஊழியர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்த கூகல், எச்பி போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து இவருக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.

அண்மையில் 'தி பெட்டர் இந்தியா' எனும் மின்னிலக்க ஊடகத் தளம், அண்ணாதுரையை பேட்டி எடுத்தது. இது, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் கவனத்துக்கு வந்தது.

'எம்பிஏ' முதுநிலைப் பட்டக்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் அண்ணாதுரையுடன் ஒருநாள் செலவிட்டால், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்று டுவிட்டரில் புகழாரம் சூட்டினார் ஆனந்த் மஹிந்திரா.

அண்ணாதுரையின் செயல்பாட்டைப் பார்த்து வியந்தவர்களில் மற்றொருவர் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்.

அண்ணாதுரையை பாராட்டி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தொடர்ச்சியாக இவரைக் கவனித்து வருகிறேன். தொழில்மீது இவர் வைத்திருக்கும் மரியாதையை எல்லாரும் கண்டிப்பாக பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டார்.

தொழில்மீது தாம் வைத்திருக்கும் கடப்பாடு குறித்து பேசிய அண்ணாதுரை, "வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தில்தான் நான் வேளைக்கு வேளை சாப்பிடுகிறேன். எனவே, அவர்கள்தான் எனக்கு முதல் கடவுள்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.