இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று கேட்பதைப் போல என்னை நோக்கினார் கொல்லன் பட்டறை உரிமையாளர் ஜெயராமன், 67.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குக்கிராமமான நெடுமருதூரில் ஓர் இடத்தில் 15 அடி நீளம், 10 அடி அகலத்திற்குச் சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு அதன் வாசலில் பட்டறை நடத்தும் ஜெயராமன், கடந்த 43 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறார்.
எனக்கு 24 வயதாக இருந்தபோது இந்த வேலையைத் தொடங்கினேன். என் தந்தை, உடன்பிறந்தவர்கள் எல்லாரும் ஏதாவது கூலிவேலை செய்து பிழைத்தவர்கள்.
இந்தத் தொழில் ராஜராஜசோழன் காலத்திலிருந்து தொன்றுதொட்டு இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். விட்ட குறையோ தொட்ட குறையோ எனக்குத் தெரியாது.
பல தலைமுறைக்கு முந்திய என்னுடைய மூதாதையர்கள் இந்தத் தொழிலைச் செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் இந்தத் தொழிலைத் தேர்ந்து எடுத்துக்கொண்டது எப்படி என்பதும் தெரியவில்லை.
இதே இடத்தில் பல ஆண்டு காலமாக, இதோ இந்தக் கைகளால் நான் உருவாக்கிய ஆயிரக்கணக்கான மண்வெட்டிகளும் அரிவாள்களும் கோடரிகளும் மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்குப் பேருதவியாக இருந்து வந்துள்ளன என்று காய்ச்சுப்போன தன்னுடைய இரண்டு கைகளையும் காட்டினார் ஜெயராமன்.
கொல்லன் பட்டறை என்பவை, சிறிய அளவிலான கிராமப்புற இரும்பு வேலை நடக்கும் இடம்.
இரும்பை பழுக்கக் காய்ச்சி அதை அடித்து மண்வெட்டியாக, கோடரியாக, அரிவாளாக உரு வாக்க நெருப்பில் கடந்து நாங்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.
வடக்கே இருந்து சவுக்குக் கரி வரும். பெரிய அளவிலான முதல் தர கரி ஒரு கிலோ ரூ.35க்கு விற்கிறார்கள். அது எனக்குக் கட்டுப்படியாகாது. ஆகையால் ரூ.500 கொடுத்து ஒரு மூட்டை தூள் கரியை வாங்குவேன்.
எந்த அளவுக்கு இரும்பு தேவையோ இரும்புக் கடைக்குப் போய் அந்த அளவுக்கு எடைபோட்டு அப்போதைய விலையில் அந்த உலோகத்தை வாங்கி வருவேன். இரும்பிலே மூன்று வகை உண்டு. வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு, தேனிரும்பு.
இரும்புத் தாதுவில் அதிக அளவு கரி (கார்பன்) சேர்ந்து இருந்தால் அது வார்ப்பு இரும்பு. வேகமாக கீழே போட்டால் இது உடைந்துவிடும். கையால் அடிக்கக்கூடிய தண்ணீர்ப் பம்பு இந்த இரும்பால் வார்த்து உருவாக்கப்படுகிறது. ஆகையால்தான் இதற்கு வார்ப்பு இரும்பு என்று பெயர்.
தேனிரும்பில் கரி மிகவும் குறைவாக இருக்கும். ஆகையால் இது வளையும். இதை வேலைக்குப் பயன்படுத்த முடியாது.
எஃகு இரும்புதான் எங்களுக்கு வேலைக்கு ஒத்துவரும். அதை வாங்கி அளவுக்குத் தகுந்தாற்போல் வெட்டிக்கொள்வோம்.
எங்கள் பட்டறை என்பது ஒரு குழி. அதன் மேல் கல்லை வைத்து கோபுரம் போல் கட்டி இருப்போம். அந்தக் குழியில் கரி போட்டு நெருப்பை உருவாக்குவோம்.
அதற்கான காற்று வருவதற்காக ஊதாங்குழல் போன்ற ஒரு சிறிய சக்கரம் பொருத்தப்பட்ட ஒரு குழாயை இணைத்து இருப்போம்.
அந்தச் சக்கரத்தைச் சுழற்றினால் குழாய் வழியாக குழிக்குக் காற்று வரும். அதனால் குழியில் உள்ள கரி தகதகவென அனல் பறக்கும். அதில் இரும்பை வைத்து பழுக்க வைப்போம்.
அளவுக்கு அதிகமாக இரும்பு பழுத்துவிட்டால் இரும்பு உருகிப்போய்விடும். அதனால் பக்குவமாக நீண்ட குறடால் பிடித்து எடுத்து இரும்பு பழுத்து இருக்கும்போதே அடித்து அதை வேண்டியபடி நீட்டி, மடக்கி உருவாக்குவோம்.
இப்போது எனக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை கிடைக்கும். ஒரு நாளில் சுமார் நான்கு மண்வெட்டிகளை அடித்து உருவாக்குவேன்.
மண்வெட்டி முக்கியமாக வயல்வெளியில் விவசாயத்துக்குப் பயன்படும். மரம் வெட்டவும் வீட்டு வேலைகளுக்கும் அரிவாள் பயன்படும். விறகைப் பிளக்க கோடரி பயன்படும். யாராவது வந்தால் பட்டறையில் உதவிக்கு வைத்துக்கொள்வேன். இல்லை என்றால் நானே எல்லா வேலையையும் பார்ப்பேன்.
மண்வெட்டியை அடித்து உருவாக்கியதும் கருவமரம், தேக்கு மரக்கிளைகளைக் கொண்டு செதுக்கி, இழைத்து கைப்பிடியை உருவாக்கி சூட்டோடு சூடாக மண்வெட்டியில் அதைப் பொருத்தி முழுமையாக்கி கொடுத்துவிடுவேன்.
இப்படியாகச் சம்பாதித்துத்தான் என்னுடைய மூன்று புதல்விகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தேன். எனக்கு ஆறு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.
யார் இருந்தாலும் யார் இல்லாவிட்டாலும் நான் நம்புவது என் கைத்தொழிலைத்தான் என்கிறார் இந்த முதியவர்.
டிராக்டர் போன்ற சாதனங்கள் வந்ததால் எங்கள் தொழில் மிகவும் படுத்துவிட்டது. மண்வெட்டிக்கான தேவை குறைந்துவிட்டது.
பொதுவாக எங்களுக்கு- இந்தத் தொழிலுக்கு நகர்ப்புறங்களில் வேலையில்லை. கிராமப்புறங்களில்தான் காலத்தை ஓட்டுகிறோம்.
நான் இருக்கும் வரை இதைத் தொடர்வேன். எனக்குப் பிறகு என் பட்டறையை யாராவது நடத்து வார்களா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
எனக்குத் தெரிந்த இந்தத் தொழிலைக் கைவிடவேமாட்டேன். என்னால் முடிந்தவரை தொடர்ந்து நடத்தி வருவேன்.
மேலும்மேலும் மண்வெட்டிகளை, அரிவாள்களை, கோடரிகளை உரு வாக்கி பாமரர்களுக்கு, விவசாயி களுக்கு உதவுவேன். அப்படியே நானும் என் காலத்தை ஓட்டுவேன் என்கிறார் கொல்லன் பட்டறை நடத்தும் ஜெயராமன்.

