கிளாஸ்கோ: பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் கண்டுபிடிப்பாளராகிவிட்ட 15 வயது தமிழ்ச் சிறுமியின் கண்டுபிடிப்பு, 'நம் அனைவரையும் வெட்கித் தலைகுனியும்படி செய்துவிட்டதாக' இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள்முன் நேற்று செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்தினார் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர்.
"புதைபடிம எரிபொருள்களால், புகையால், மாசுபாட்டால் கட்டமைக்கப்பட்ட பொருளியல்களை ஆதரிக்காதீர்கள். பழைய விவாதங்கள் குறித்து சிந்திப்பதைத் தயவுசெய்து நிறுத்துங்கள். புதிய எதிர்காலத்திற்குப் புதிய பார்வை தேவை," என்றார் வினிஷா.
"உங்களது இன்றைய செயல்களால் ஏற்படும் விளைவுகளை நானும் என் தலைமுறையினரும் பார்க்கப் போகிறோம். நாங்கள் கோபப்பட எல்லாக் காரணங்களும் உள்ளன. ஆனால், கோபம்கொள்ள எனக்கு நேரமில்லை. நான் செயலில் இறங்க விரும்புகிறேன். நான் இந்தியாவைச் சேர்ந்தவள் மட்டுமல்லள். நான் இந்த பூமியைச் சேர்ந்த சிறுமி. அதில் நான் பெருமைகொள்கிறேன்," என்று வினிஷா பேசினார்.
அவரது உரையால் கவரப்பட்ட, அரங்கில் கூடியிருந்த உலகத் தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.
சூரிய ஆற்றலில் இயங்கும் துணிதேய்ப்பு வண்டியைக் கண்டுபிடித்ததற்காக இளவரசர் வில்லியம் தொடங்கிய 'எர்த்ஷாட்' பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வினிஷா தேர்வுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவ்வண்டியை ஐந்து மணி நேரம் சூரிய ஒளிபடும்படி நிறுத்தி வைத்தால், ஐந்து முதல் ஆறு மணி நேரம் துணி தேய்க்க முடியும்.
அது வினிஷாவின் பல கண்டுபிடிப்புகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட இளவரசர் வில்லியம், அவரது கடின உழைப்பு 'நம்மை எல்லாம் வெட்கித் தலைகுனியும்படி செய்துவிட்டதாகக்' குறிப்பிட்டார்.

