தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புற்றுநோய் உண்டாக்கும் நிறமி கலக்கப்படுவதாக புகார்: பானிபூரி விற்கும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடிச் சோதனை

2 mins read
9d8ed8ab-fad1-4d46-8acb-a02cee8aafef
பானிபூரி விற்கும் கடைகளில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டது. - படம்: விகடன்

சென்னை: தமிழகம் முழுவதும் பானிபூரி விற்கும் இடங்களில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டது.

சாலையோர உணவகங்களில் பானிபூரி விற்கப்படும் நிலையில், ஏராளமான இளையர்கள் அவற்றை நாள்தோறும் உட்கொள்கின்றனர்.

இந்நிலையில், பானிபூரியில் கலக்கப்படும் சில நிறமிகள் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஒரு தகவல் பரவி வருகிறது.

பானிபூரிக்கான மசாலாவில் கலக்கப்படும் நிறமிகளை பயன்படுத்தக்கூடாது என சில நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டதாக தமிழ் இந்து ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரியின் தரம் குறித்து பல்வேறு தரப்பினரும் புகார்கள் எழுப்பினர்.

இதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள உயர்தர உணவகங்கள், சாலையோரக் கடைகளில் விற்கப்பட்ட பானிபூரிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றைச் சோதனைக்கு உட்படுத்தியபோது புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டு இருப்பது உறுதியானது.

இந்நிலையில், தமிழகத்திலும் பானிபூரி கடைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானிபூரி கடைகளில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அதிகாரி சதீஷ் குமார் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானிபூரி கடைகள் இயங்குவதாக தெரிவித்தார்.

பானிபூரி நல்ல உணவு வகை என்றும் சுறுசுறுப்புத்தன்மையை அதிகரிக்கும் ஓர் உணவு வகை என்றும் குறிப்பிட்டார்.

பானிபூரிக்குத் தேவைப்படும் மசாலா நீரில் ஒருவகை நிறமி கலக்கப்படுகிறது. இது புற்றுநோய்க்கான காரணியாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.

எனவே, ஆய்வுக்குப் பின்னர் இது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திரு.சதீஷ் குமார்.

முன்னதாக, கர்நாடகா மாநிலம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் விற்பனையாகும் 200க்கும் மேற்பட்ட பானி பூரி மாதிரிகளைச் சேகரித்து கர்நாடக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், பல மாதிரிகள் சோதனைகளில் தோல்வியடைந்துள்ளன.

மேலும், புற்றுநோய் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் அதில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் பானி பூரி உணவுப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்