ராமநாதபுரம்: பெண் சார்பதிவாளரிடம் இருந்து ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் லஞ்சப் பணத்தின் மூலம் பெற்ற சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக உள்ளார் பெத்துலெட்சுமி.
இவர் பத்திரப் பதிவுக்காக தொடர்ந்து லஞ்சம் பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்காகணிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில், அவர் தனது அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை வாங்காமல், ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்களை வெவ்வேறு இடங்களில் சந்தித்து லஞ்சத் தொகையைப் பெறுவது தெரியவந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இடைத்தரகர்களை சந்தித்து ரூ.2 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது பெத்துலெட்சுமி கையும் களவுமாகச் சிக்கினார்.
இதையடுத்து பெத்துலெட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கணக்கில் வராத ரூ.12 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்களைக் கைப்பற்றினர்.

