மக்கள் நீதிமன்றங்களில் ஒரே நாளில் 1.02 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு

மக்கள் நீதிமன்றங்களில் ஒரே நாளில் 1.02 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு

1 mins read
3604ef9f-8993-4018-9971-51fa3307b654
பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், நாடுதழுவிய அளவில் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தப்படுகிறது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம், ஒரே நாளில் 1.02 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.

பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், நாடுதழுவிய அளவில் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வழிகாட்டுதலின்படி, மாநிலச் சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாகத் தலைவரும் மூத்த நீதிபதியுமான எஸ்.எம்.சுப்பிரமணியம் மேற்பார்வையில் இந்த ஆண்டுக்கான லோக் அதாலத் விசாரணை, சனிக்கிழமை (செப்டம்பர் 12) நடைபெற்றது.

இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 524 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இதில் மோட்டார் வாகன விபத்துக்கான நஷ்டஈடு, காசோலை மோசடி, குடும்பத் தகராறு, சிவில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நீதிபதிகள், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அழைத்து நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, சம்மதத்தின் பேரில் வழக்குகளைச் சமரசமாக முடித்து வைத்தனர்.

இதுகுறித்து மாநில சட்டப்பணி ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலரும் நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தமாக ரூ.982 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது,” என்றார்.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மாவட்ட முதன்மை நீதிபதி பி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 17,840 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு, 15,948 வழக்குகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன.

இதன்மூலம் ரூ.172.82 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்