சென்னை: ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 1.12 லட்சம் வழக்குகளுக்கு ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.632 கோடி நிவாரணம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் செயல்படும் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விபத்து, நஷ்ட ஈடு தொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஜூன் 14 சனிக்கிழமை நடைபெற்ற ‘லோக் அதாலத்’ வாயிலாக, 1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.631 கோடியே 80 லட்சத்து 27,703 நிவாரணம் கிடைத்துள்ளது.
மக்கள் நீதிமன்றம் ஒவ்வோர் ஆண்டும் நான்கு முறை இவ்வாறு கூடி, வழக்குகளுக்குத் தீர்வு காண்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வுகாணப்படுவது பாதிக்கபட்டவர்களுக்கு நிம்மதி அளிப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
“சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மூன்று அமர்வுகள் அமைக்கப்பட்டன. வழக்குகள் தொடர்பாக இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளையும் உடனுக்குடன் அறிவித்தனர்,” என்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

