சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த ஜூன் 23ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன.
இதன்மூலம், பாதுகாப்பான பிரசவத்தையும் ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதையும் உறுதிசெய்வதில் பொதுச் சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மோதிரத்தில் தனித்துவமான வரிசை எண்ணும் சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்துக்காக முதல் தவணையாக 128,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22 தொடங்கி செப்டம்பர் 28 வரை பிறந்த, பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் நாள்தோறும் 100 குழந்தைகள் என செப்டம்பர் 28ஆம் தேதிமுதல் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திட்டம் தொடக்கப்பட்ட பின்னர், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் வீடு திரும்பும்போது தங்க மோதிரம் வழங்கப்படும்.
