சென்னை: ஆண்டுதோறும் வெளிநாடுகளிலிருந்து 1.5 மில்லியன் பேர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர் என்று மாநில மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் ‘எதிர்கால மருத்துவம் 2.0’ எனும் மூன்று நாள் பன்னாட்டு மாநாட்டைத் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
அதன் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அமைச்சர் சுப்பிரமணியன் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உள்ள கருவிகள் தமிழக அரசு மருத்துவமனைகளிலும் இருக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவோரில் 25 விழுக்காட்டினர் தமிழகத்திற்கு வருகின்றனர். அதாவது, ஆண்டிற்கு 1.5 மில்லியன் பேர் சிகிச்சை பெற தமிழகம் வருகின்றனர்,” என்று அவர் சொன்னார்.
மருத்துவ மாநாட்டில் 15,000 மாணவர்களும் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 38 மருத்துவ வல்லுநர்களும் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
‘ஆறு ஆண்டுகளாக ஆய்வு செய்யாத மத்திய அரசு’
இதனிடையே, இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைப் பறித்த கோல்டிரிஃப் இருமல் மருந்தைத் தயாரித்த நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு தொடர் ஆய்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
“கோல்டிரிஃப் மருந்துக்கான உரிமம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. அதனை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில் 397 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின்மூலம் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் மதிப்பு ரூ.12,000 கோடியில் இருந்து ரூ.15,000 கோடியாகும்.
“எனவே, இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. இதில் இந்தியாவின் பொருளியல் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, மிக அமைதியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடியதோடு, அதனை நிரந்தரமாக மூடவும் உத்தரவிட்டுள்ளோம்,” என்று அவர் விளக்கமளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், மருத்துவர்களின் பரிந்துரையின்றி கிடைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று திரு சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.