சென்னை: தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சென்னை மாநகராட்சி.
இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்தது.
அவற்றுக்கு ரூ.3 கோடி செலவில் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி போடப்படும் என்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வரும் ஜூலை மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைகள், செல்லப் பிராணிகள் பதிவு, சிகிச்சை உள்பட பல்வேறு நடவடிக்கைகளையும் மாநகராட்சி மேற்கொள்ளும் என அதில் விரிவாக விளக்கியுள்ளது.
“தெருநாய்களைப் பிடிக்கும் பணிகளுக்காக 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய் பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். “மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1,80,157 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
“2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் 66,285 தெருநாய்கள், 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது,” என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்கள், செல்லப்பிராணிகள் என இரண்டு லட்சம் நாய்களுக்கும் அதன் விவரங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்து நுண் சில்லு (மைக்ரோசிப்) பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அறிக்கை தெரிவிக்கிறது.