மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

2 mins read
ca806c35-afcc-41cd-956c-e5f32e1a445d
ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். - படம்: ஊடகம்

சிவகங்கை: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனவரி 21ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவர் புதிய திட்டப்பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து காரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கவிஞர் முடியரசனுக்கு சிலை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை அருகே மேலப்பூங்குடியில் சீல்டு கால்வாய் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில், ரூ.50 லட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைத்தார்.

“வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. சிவகங்கை மாவட்ட வளர்ச்சியில் தி.மு.க ஆட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு கொடுத்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

“சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும். திருப்பத்தூரில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும்.

“ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று உதவுவதுதான் திராவிட மாடல் அரசு,” என்று அவர் கூறினார்.

சிவகங்கையில் ரூ.376.25 கோடி மதிப்பீட்டில் 45 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் 50,000 பேருக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்