சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் அவர்களைத் தொழில்நுட்ப ரீதியாக வல்லவர்களாகத் திகழச் செய்யவும் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 5) நடைபெற்ற விழாவில் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
அரசுப் பொறியியல் கல்லூரிகள், கலை; அறிவியல் கல்லூரிகள், மருத்துவம், வேளாண்மை, பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
வழங்கப்படவுள்ள மடிக்கணினிகளில் Intel i3/AMD Ryzen 3 பிராசஸர், 8 GB RAM, 256 GB SSD உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளன.
மேலும், இதில் விண்டோஸ் 11, பாஸ் லினக்ஸ் (BOSS Linux) இயங்குதளங்களும் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை வளர்க்க ‘பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ’ (Perplexity Pro) என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கான ஆறு மாதகால இலவச சந்தாவும் இத்துடன் வழங்கப்படுகிறது.
வெறும் புத்தகப் படிப்புடன் நின்றுவிடாமல், மென்பொருள் உருவாக்கம், கோடிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஃப்ரீலான்சிங் போன்ற நவீன வேலைவாய்ப்புத் துறைகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு, மாணவர்களின் கனவுகளை நனவாக்கவும் அவர்களை உலகத்தோடு போட்டிபோடச் செய்யவும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

