சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஐந்து மாதங்களில் பத்து லட்சம் டன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாநில உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் 2,444 நேரடிக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 2024 செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 2025 பிப்ரவரி 4ஆம் தேதிவரை 144,248 விவசாயிகளிடமிருந்து 1,041,583 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
“அதற்காக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மின்னணுப் பணப் பரிமாற்ற முறையில் ரூ.2,247.52 கோடி செலுத்தப்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரம்வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இவ்வாண்டு பிப்ரவரி முதல் வாரம்வரை அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 2024 பிப்ரவரி 4ஆம் தேதிவரை 742,335 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 2025 பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் கூடுதலாக 299,248 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.