சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், அவற்றுள் 10 விழுக்காடுகூட நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்டார்.
தனது அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், தமது அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் திரண்ட முதலீடுகள் குறித்து, தான் விளக்கமாக கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
தொழில் துறை அமைச்சரும் இது குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்கியுள்ளார் என்றார்.
“எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாக கூறினார். ஆனால் 10 விழுக்காடு ஒப்பந்தகள்கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதைக் கூறினால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் தவிர்த்துள்ளேன்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி அளிப்பது குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர், இது தொடர்பாக தாம் பிரதமரைச் சந்திக்க இருப்பதாகக் கூறினார்.
பள்ளிக் கல்வியில் புதிய கல்விக்கொள்கையை ஏற்பது குறித்து பிரதமரிடம் நேரில் வலியுறுத்த, தாம் நேரம் கேட்டிருப்பதாகவும் பிரதமரைச் சந்திப்பது உறுதி என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமது அமெரிக்க பயணத்தின்போது குறைந்த அளவிலான முதலீடுகள்தான் ஈர்க்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் உள்நோக்கத்துடன் குற்றஞ்சாட்டி இருப்பதாக குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான, உறுதியான முதலீடுகள் கிடைத்துள்ளன என்றும் இது குறித்து சந்தேகம் தேவையில்லை என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
முதல்வர் பயணத்தின் மூலம், மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

