தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் ஏழை எளிய மக்களுக்காக பத்து ரூபாய் மட்டும் கட்டணம் பெற்று சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் டி.ஏ.கனகரத்தினம் காலமானார். அவரது வயது 96.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவச் சேவையாற்றி வந்த அவரது மறைவு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள சீனிவாசபுரத்தில் கிளினிக் நடத்தி வந்தார் மருத்துவர் கனகரத்தினம். தொடக்கத்தில் ரூ.2 மட்டுமே கட்டணமாக வசூலித்த இவர், பின்னாள்களில் அதை ரூ.5ஆக உயர்த்தினார். பின்னர் 1990ஆம் ஆண்டு இது பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டது.
தனது மருத்துவப் பணியின்போது ஏறக்குறைய 65,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ள மருத்துவர் கனகரத்தினம், கடந்த ஐந்து ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக, வீட்டிலேயே ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை (ஜூன் 7) அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு தஞ்சாவூர் பகுதியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், மருத்துவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மனிதநேயமிக்க மருத்துவர் எனப் பெயர் வாங்கிய கனகரத்தினத்தின் மகன், மருமகள் இருவரும் மருத்துவர்களாக உள்ளனர் என்பதுடன், குறைந்த கட்டணம் பெற்றே சிகிச்சை அளிக்கின்றனர்.