தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு

1 mins read
27f015fc-caba-4b2a-846d-75b20df1b31e
ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். - படம்: மாலை மலர்

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் பத்துப் பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

இலங்கைக் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட பத்து மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த ஒரு வார காலமாக, மோசமான வானிலை காரணமாக, மீன்பிடிக்கச் செல்லாத ராமேசுவரம் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை மீன்பிடிக்க மீண்டும் கடலுக்குச் சென்றனர். ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை கடந்து வந்து மீன்பிடித்ததாகக் கூறி, தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகைச் சிறைபிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்படகில் இருந்த பத்து மீனவர்கள், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் மூன்று விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இதுவரை தமிழக, புதுவையைச் சேர்ந்த 29 மீனவர்கள் கைதாகி உள்ளனர்.

இதனிடையே, மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்