கோவை சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இருவர் கைது

கோவை சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இருவர் கைது

2 mins read
aecdd982-d2e4-47b0-82ff-e9f295d0aab0
(இடது) கார்த்தி, மோகன். - படங்கள்: இந்து தமிழ் திசை

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பத்து வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட இரு இளையர்களைக் காவல்துறை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தது.

கண்காணிப்புக் கேமரா காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அருகில் வசித்து வந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும் விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தெரிவித்தார்.

முன்னதாக, வியாழக்கிழமை (மே 21) தன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். கவலை அடைந்த பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கண்ணம்பாளையம் குளக்கரை தென்னந்தோப்பில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சோகமும் கோபமும் அடைந்த சிறுமியின் உறவினர்கள் கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நிலைகுத்தியது.

கழுத்தை நெரித்து, முகத்தைச் சிதைத்து

“உடற்கூராய்வில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கற்களால் தாக்கி அடையாளம் காண முடியாத அளவுக்கு முகத்தைச் சிதைத்துள்ளனர்,” என்று சிறுமியின் சித்தி கண்ணீர் மல்க கூறினார்.

விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சிறுமியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளி கார்த்தி, 33, அவரது நண்பர் மோகன், 30, ஆகிய இருவரும் திட்டமிட்டுச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று இக்கொடூரத்தைச் செய்திருப்பதை உறுதி செய்தனர்.

காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த கார்த்தி, கை, கால்களில் பலத்த காயமடைந்ததால், மருத்துவமனை கண்காணிப்பில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த மோகனும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

விரைவில் குற்றப்பத்திரிகை: முதல்வர் விஜய் உத்தரவு

சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் விஜய், இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு, உடனடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத இத்தகைய குற்றச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று முதல்வர் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக முதல்வர் விஜய், சிறுமியின் குடும்பத்தாரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும், சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவியும் அளிக்க உத்தரவிட்டார்.

தங்களுக்கு ஒரு வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்ததாக சிறுமியின் பெற்றோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்