சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில், ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரியப் பூங்கா என்ற சிறப்பு பூங்காவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் உதவியுடன், தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாக, ஏறக்குறைய 223 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோவளம் பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்தப் பூங்காவில் சோலை வனம், விஹாரம், மைதானம் என மூன்று பிரிவுகள் இடம்பெறும் என்றும் கோவளத்தில் இரண்டு நட்சத்திர தங்குவிடுதிகள், நான்காயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும் என்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
பூங்காவின் சோலைவனம் பகுதியில் தமிழகத்தின் பாரம்பரிய, வரலாற்றுச் சிறப்புகளைக் குறிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன என்றும் கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புறத் தெய்வங்கள், இசைத் தோட்டம், கலைநிகழ்ச்சிகள், கைவினைப்பொருள்கள் காட்சி, பொம்மை பூங்கா ஆகியவற்றின் சிறு உருவங்கள் இடம்பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.
விஹாரம் பகுதி முழுவதும் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, ஒளிரும் பூங்கா ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
மைதானம் உள்ள பகுதியில் 25,000 பேர் கூடும் வகையில் 13 ஏக்கர் பரப்பளவில் நிகழ்ச்சி நடத்துவதற்கான வசதிகள் செய்யப்படும்.
மேலும், விளையாட்டுத் திடல்கள், நடைபாதைகள், நீர்வழிகள், சைக்கிள் பாதைகள் உருவாக்கப்படும்.
“கருப்பொருள் சிற்பங்கள், சிறு கடைகள், திறந்தவெளித் திரையரங்குகள், கலாசாரக் குடில்கள், உணவு அரங்கம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், இது சென்னைவாசிகளுக்கு கிழக்கு கடற்கரைச்சாலைப் பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலமாக திகழும்,” என சுற்றுலாத்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


