விருதுநகர்: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டின் ஒரே மாவட்டத்தில் 34 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இந்தியாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ரூ.35 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சின் (MORD) உள் தணிக்கைப் பிரிவு (IAW) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2023-24ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MG-NREGS) கீழ் தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் மொத்தமாக ரூ.35.37 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை IAW கண்டறிந்துள்ளது.
இதில், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ.34.02 கோடியும் நாகூரில் (ராஜஸ்தான்) ரூ.1.09 கோடியும் மொரேனாவில் (மத்தியப் பிரதேசம்) ரூ.26 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐஏடபிள்யூ கண்டறிந்துள்ளது.
இந்தத் தகவல்கள் கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.