தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: ஆதாரங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தகவல்

2 mins read
2ee2bf64-221b-4d59-921a-650d11e00dc5
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இடைவிடாமல் சோதனை நடந்தது. - படம்: ஊடகம்

சென்னை: அண்மையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மத்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தப்புள்ளி, மதுக் கூடங்களுக்கு உரிமம் வழங்குவது ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் (தமிழ் நாடுமாநில வாணிபக் கழகம்) நிறுவனம் பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து பலவகையான மதுபானங்களைக் கொள்முதல் செய்கிறது. இதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. மேலும், இதில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய அமலாக்கத்துறைக்கு கடந்த 6ஆம் தேதியன்று டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புள்ள இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

சென்னை எழும்பூரில் உள்ள அந்நிறுவன தலைமை அலுவலகத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இடைவிடாமல் சோதனை நடந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மதுபான உற்பத்தி நிறுவனம், என ஐந்து மாவட்டங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தற்போது டாஸ்மாக் முறைகேடு தொடர்பான முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும்கூட மதுக்கூடம் நடத்த உரிமம் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருப்பதை ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதன் மூலம் நிறுவனங்கள் முறைகேடாக அதிக லாபம் சம்பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே, ரூ.1000 கோடி ஊழலைக் கண்டித்து வரும் 17ஆம் தேதி

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்