சென்னை: தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் உள்ளதாக அண்மையில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும், விசாரணை என்ற பெயரில் அரசு அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது எனவும் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு இடைவிடாமல் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை மதுபானக் கிடங்குகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அப்போது ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் இது தொடர்பான பல்வேறு ஆதாரங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு நிறுவனம் ஒன்றில் இவ்வாறு மூன்று நாள்களுக்குச் சோதனை நடைபெற்றது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தைக் குறிவைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதால் இவ்விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளுக்குத் தடை கோரி டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழக அரசின் அனுமதியின்றி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மார்ச் 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனையையும் ஆவணங்கள் பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.