தஞ்சை: பல்வேறு சோதனை நடவடிக்கைகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட 1,000 கிலோ கஞ்சா, தஞ்சை காவல்துறையினரால் மொத்தமாக அழிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் காவல்துறை தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் வகையில் ‘ஆப்பரேஷன் கஞ்சா’ என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நூற்றுக்கணக்கான கஞ்சா வியாபாரிகள், கடத்தல்காரர்கள் கைதாகி உள்ளனர். இவர்களது சொத்துகளும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா தொடர்பாக 317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,000 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது.
மருத்துவக் கழிவுப்பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் டிஐஜி ஜியாவுல் ஹக் முன்னிலையில் கஞ்சாவை அழிக்கும் பணி நடைபெற்றது.