சென்னை: தமிழகம் முழுவதும் பருவமழைக் காலத்தின்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் இதுவரை டெங்கி காய்ச்சலுக்கு எட்டுப் பேர் பலியாகிவிட்டதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு இதுவரை 15,796 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டெங்கி பாதித்தோர் விவரங்களை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
“தமிழ்நாட்டில் கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களாக டெங்கி பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கி பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அரசின் நடவடிக்கையால் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
“பருவமழைக் காலங்களில் ஆண்டுதோறும் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு அதற்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படும்.
“ஏற்கெனவே பருவமழைக் கால மருத்துவ முகாம்களின் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
மிஞ்ஜாம் புயலின்போது 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தியதில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்,” என்றார் மா.சுப்பிரமணியன்.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மாநிலம் முழுவதும் வெள்ளத் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தமிழக அரசு அதிகமாக செலவு செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், எதிர்வரும் மழைக்காலத்துக்கு முன்பாக, தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றார்.