தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது

1 mins read
902b2c66-6158-47e2-a308-c27ef05e7d6d
குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நெல்லை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  - கோப்புப்படம்: ஊடகம்

திருநெல்வேலி: சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்டதாக நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதன் விளைவாக, இத்தகைய சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

“அண்மைக் காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளையர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும் பிற சமுதாயங்களைத் தரம் தாழ்த்தும் விதமாகவும் உள்ளடக்கங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“இது சமூகத்தில் சாதிய உணர்வுகளைத் தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது,” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களைக் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட பதிவுகள் தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

சமூக ஊடகங்கள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்