சிறுவர் சீர்திருத்த இல்லத்திலிருந்து 11 பேர் தப்பியோட்டம்

சிறுவர் சீர்திருத்த இல்லத்திலிருந்து 11 பேர் தப்பியோட்டம்

படம்: இந்து தமிழ் திசை

16 Aug 2026 - 6:39 pm

1 mins read

செங்கல்பட்டு: அரசு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரைச் சிறைபிடித்து 11 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதான சிறுவர்கள் இந்த இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) இரவு, சிறுவர்கள் திடீரெனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிவிட்டுத் தப்பியோடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தப்பியோடிய சிறுவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட்டான். மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டுக்கு உட்பட்ட காவல் நிவையங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படைகள் 10 சிறுவர்களையும் தேடி வருகின்றன. கடந்த எட்டு மாதங்களில் அக்குறிப்பிட்ட சீர்திருத்த இல்லத்தில் இதேபோன்று நடைபெறும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

தொடர்ந்து நடைபெறும் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள், சிறுவர் சீர்திருத்த இல்லத்தின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பில் உள்ள கடுமையான குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. எனவே, அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க இல்லத்தின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்