சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி கஞ்சா பறிமுதல்; துணை நடிகை உட்பட மூவர் கைது

2 mins read
eb61eab8-e8ca-4324-8766-f136913f85e0
தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து வந்த இரு பெண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய கஞ்சாவின் ஒரு பகுதி. - படம்: ஊடகம்

சென்னை: சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் அடுத்தடுத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பிடிபட்டுள்ளன.

இரு வேறு சம்பவங்களில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 13) தாய்லாந்திலிருந்து சென்னை வந்திறங்கிய இரண்டு பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்களின் பயணப் பெட்டிகளில் 28 கிலோ கஞ்சா இருந்தது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அதிக போதை தரக்கூடிய செயற்கை வகை கஞ்சா என்று அதிகாரிகள் கூறினர்.

பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் துபாயில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தார் என்றும் தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடிப்பார் என்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

பிடிபட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் கூறினர்.

தாய்லாந்தின் போதைப்பொருள் கும்பலிடம் இருந்து பெறப்பட்ட கஞ்சாவை புக்கெட் விமான நிலையத்தில் இருந்து பெண்கள் இருவரும் கடத்தி வந்ததாகக் கூறப்பட்டது.

மேலும், தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருப்போருக்கு விநியோகிக்க அவை கடத்தி வரப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தச் சம்பவம் நிகழ்ந்த இரு தினங்களில், சனிக்கிழமை (நவம்பர் 15) ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கினார்.

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலையடுத்து தாய்லாந்தில் இருந்து வந்த விமானப் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது இளையரின் பயணப்பெட்டியில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இளையரை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்