மதுரை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென் மண்டல ஐஜி பிரேம்குமார் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான 709 வழக்குகளில் 1,133 பேருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
இது தென்மாவட்ட அளவில், குறிப்பிடத்தக்க சாதனை என்றும் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 89 தொலை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
“அதிகபட்சமாக நெல்லையில் 15 வழக்குகளில் தண்டனை கிடைத்துள்ளது. ஒரு வழக்கில் துாக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
“தேனியில் 15, துாத்துக்குடி 13, விருதுநகர் 12, சிவகங்கையில் 9 வழக்குகளில் மொத்தம் 196 பேருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. இதில் 27 பேர் ரவுடிகள்.
“மதுரை, நெல்லை மாவட்டங்களில் 14 ரவுடிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு, 232 குற்றவாளிகள் தொடர்புடைய 132 கொலை வழக்குகளில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதில் 47 வழக்குகள் ரவுடிகள் தொடர்புடையது,” என்றார் ஐஜி பிரேம்குமார் ஆனந்த் சின்ஹா.
தென்மாவட்டங்களில் காவல்துறையினரின் தீவிர விசாரணை, தொடர் கண்காணிப்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு போன்ற காரணங்களால் 1,133 பேருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.