தஞ்சாவூர்: போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் ஐந்து மண்டலங்களில் நடைபெற்றது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அடுத்த அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், கரூர், அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1,145 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட காவல்துறையினர் மூட்டைகளாக கட்டி வாகனங்கள் மூலம் தொழிற்சாலைக்குக் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, அங்குள்ள ராட்சத கொதிகலன்களில் கஞ்சாவைப் போட்டு காவல்துறையினர் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தவாறு பணியாளர்கள் அழித்தனர். தஞ்சை எல்லை டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கஞ்சா பொட்டலங்களைத் தீயில் போட்டு அழிக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல்கட்டமாக 1,145 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
பின்னர் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியைக் காவல் உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.