சென்னை: தமிழ்நாட்டில் ‘பாரத்நெட்’ திட்டத்தின்மூலம் 11,507 ஊராட்சிகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவிலுள்ள எல்லாச் சிற்றூர்களையும் ஊராட்சிகளையும் மின்னிலக்க முறையில் இணைப்பதற்கான விரிவலை இணைப்பை வழங்கும் நோக்கத்துடன் இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சு ‘பாரத்நெட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நாட்டிலுள்ள 250,000 ஊராட்சிகளையும் இணைக்கும் வகையில் அவற்றுக்கு ஒரு கிகாபைட் அளவிலான இணைய இணைப்பை வழங்க அத்திட்டம் இலக்கு வகுத்துள்ளது.
இந்நிலையில், “பாரத்நெட் திட்டத்திற்கான இரண்டாம் கட்டத்தின்கீழ், ரூ.1,815.31 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு இணைய இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, அந்தச் சிற்றூர்கள் பயன்பெறும் வகையில் 57,500 கி.மீ நீளத்துக்கு கண்ணாடியிழை பதிக்கும் பணிகள், தமிழக அரசின்கீழ் செயல்படும் சிறப்பு நோக்கு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) மூலம் நடைபெற்று வருகின்றன,” என்று அமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார்.
மாநிலத்தில் ‘பாரத்நெட்’ திட்டம் மூலம் ஊராட்சிகளை இணைக்கும் பணிகள் 91.8 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகவும் இதுவரை மொத்தம் 11,507 ஊராட்சிகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஊரகப் பகுதிகளில் 48,082 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர்மட்டக் கம்பத்தின் வழியாகவும், 5,107 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலத்தடிக் கண்ணாடியிழை வழியாகவும் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.