சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டிலிருந்து ரூ.12.41 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.6.41 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டு பல்வேறு புகார்களின் அடிப்படையில், மார்ட்டின் குறித்து அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையின்போது, சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையின் மூலம் மார்ட்டின் தரப்பு ரூ.910 கோடி முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. அத்தொகையை அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார்.
விசாரணையின்போது மார்ட்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 14 முதல் 17ஆம் தேதி வரை மார்ட்டின், அவரது மருமகனான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 22 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம், ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.


