சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் 1,271 தாதியர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தாதியர் அந்த நிரந்தரப் பணிகளில் அமர்த்தப்படுவர் என்று தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தலைமையில் திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கொவிட்-19 பரவல் காலத்தில் பணியாற்றிய தாதியருக்கு அரசுப் பணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிரந்தர மற்றும் தற்காலிகப் பணிகளில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
“அவ்வகையில், கொவிட்-19 தொற்றுக்காலத்தில் பணியாற்றிய 1,412 தாதியர் சென்ற ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது 1,271 நிரந்தரப் பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. கொவிட்-19 பரவலின்போது பணிபுரிந்த 1,271 ஒப்பந்தத் தாதியர் அந்த நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவர். அதற்கான கலந்தாய்வு நவம்பர் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறும். தகுதி மூப்பு, பிற காரணிகளின் அடிப்படையில், அவர்கள் விருப்பப்பட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவர்,” என்று திரு மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொவிட்-19 பரவல் காலத்தில் பணியாற்றிய எஞ்சிய 954 தாதியர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் என்றும் அவர் சொன்னார்.
“அது மட்டுமன்றி, அந்தத் தாதியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, எஞ்சியுள்ள 100 தாதியர் பணியிடங்கள் மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். இதன்மூலம், 100% தாதியர் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும். கொவிட்-19 பரவல் காலத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்,” என்றும் அமைச்சர் கூறினார்.

