சென்னை: கடந்த மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும், தமிழகத்தில் 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல், ஒழிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவை இணைத்து அமலாக்கப் பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவின் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த மார்ச் மாதம் 3,685 கிலோ, ஆகஸ்டில் 6,165 கிலோ, செப்டம்பரில் 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
“போதைப்பொருளை ஒழிக்க காவல்துறையின் சட்டம் ஒழங்கு பிரிவு, பிற மாநில, மத்திய புலனாய்வு அமைப்பினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்றார் கூடுதல் டிஜிபி அமல்ராஜ்.
கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
கஞ்சா, குட்கா போதைப்பாக்குகள் உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்போர் மீது ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.