சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான விரிவுபடுத்தப்பட்ட கடன் தள்ளுபடித் திட்டத்தின்கீழ், கூடுதல் செலவான ரூ.3,039 கோடியில் இதுவரை ரூ.2,758 கோடி விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாகக் கூறினார்.
“இத்திட்டத்திற்கான காலவரம்பு 2025 மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்காக ஏற்கெனவே மூன்று கட்டங்களாக முறையே ரூ.2,044 கோடி, ரூ.5,267 கோடி, ரூ.6,024 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது,” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகளின்படி, கடந்த ஜூன் 19, நவம்பர் 6 ஆகிய தேதிகளுக்கு முன்பாகக் கடனை முழுமையாகச் செலுத்திய தகுதியுள்ள விவசாயிகளுக்கும் உரிய தொகை திருப்பி வழங்கப்படும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பகுதி தள்ளுபடி பெற்று தவணை தவறிய கடன்களுக்கான வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதோடு, நவம்பர் 30ஆம் தேதிக்குள் தவணையைச் செலுத்துவோரின் வட்டியையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.10,000க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறுவோரின் தகுதியான கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஒரே குடும்பத்தினர் அல்லது விவசாயி பல கடன்கள் பெற்றிருந்தால், அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதியான ஒரு கடனுக்கு மட்டும் சலுகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் காந்திராஜின் அறிக்கை தெரிவிக்கிறது.
“மூன்றாம் கட்டத்தில் விடுவிக்கப்பட்ட ரூ.6,024 கோடியுடன் தற்போதைய கூடுதல் நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.9,063 கோடி அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 41,342 புதிய பயனாளிகள் உட்பட மொத்தம் 13.25 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்,” என அமைச்சர் காந்திராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
