சென்னையில் லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

2 mins read
89020af6-c391-40e1-b4c6-69b8221d4182
கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு தொடர்பான பதிவேட்டுக்கான தரவுகள் மருத்துவக்குழுவால் சேகரிக்கப்பட்டு வந்தன. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் ஒரு லட்சம் பேரில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் இது தெரியவந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு தொடர்பான பதிவேட்டுக்கான தரவுகள் மருத்துவக்குழுவால் சேகரிக்கப்பட்டு வந்தன. பாதிப்பு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சைகள், மருத்துவ நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், சென்னை மக்கள் தொகை அடிப்படையிலான குழந்தை புற்றுநோய் பதிவேடு என்பது இந்திய அளவில் அத்தகைய வகையில் மேற்கொள்ளப்படும் முதல் ஆய்வு என மருத்துவக்குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், பதின்ம வயதினருக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டதாகவும் இதன் மூலம் 2022ஆம் ஆண்டு மட்டும் 241 குழந்தைகள் புதிதாக புற்றுநோய் பாதிப்புக்குள்ளானது தெரிய வந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

அவர்களில் 139 ஆண் குழந்தைகள், 102 பெண் குழந்தைகள் அடங்குவர். ரத்தம் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

நிணநீர் மண்டலப் புற்றுநோய், சார்கோமா எனப்படும் மென் திசு புற்றுநோய், எலும்பு புற்றுநோய் ஆகியவற்றாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மக்கள் தொகையில் 10 லட்சத்தில் 136 குழந்தைகளுக்கு (லட்சத்தில் 13.6 பேர்) புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

ஆண் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 10 லட்சத்துக்கு 152.7 ஆகவும் பெண் குழந்தைகளின் விகிதம் 118.5 ஆகவும் இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 71% குழந்தைகள் உயிருடன் உள்ளனர். அவ்வாறு உயிருடன் உள்ளவர்களில் 81% பேர் புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்