விழுப்புரம்: பல்லவர் காலத்தை (கிபி 7ஆம் நூற்றாண்டு) சேர்ந்த, ஏறக்குறைய 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய சிற்பம் ஒன்று, விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியை அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள தாமரைக்குளம் பகுதியில், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டபோது, இந்த முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
தமிழர்களின் தெய்வமான முருகனுக்கு பல்வேறு வாகனங்கள் இருந்ததாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக, பிணி முகம் என்ற யானையைப் பற்றிய குறிப்புகளும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
“இதற்கு எடுத்துக்காட்டாக, கப்பியாம்புலியூரில் முருகன் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் யானை மீது அமர்ந்து முருகன் வலம் வரும் காட்சி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார்.