சென்னை: கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் பதிவான சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் 137 பேர் கைதாகி உள்ளனர்.
அவர்களுக்கு எதிராக மூன்று நீதிமன்றங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சிலைத் திருட்டு தொடர்பான வழக்குகளைக் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம், சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர நீதிமன்றம், மதுரை கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை விசாரிக்கின்றன.
இந்நிலையில், கடத்தல் வழக்கில் சிக்கிய 137 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் அவர்களுக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத ஆணை பெறப்பட்டதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும், 14 வழக்குகளில் 42 பேருக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.
தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான அரிய சிலைகள் பல்வேறு நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன. அவற்றை மீட்பதற்கும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிரிவு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, ஏராளமான சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

