சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வண்ணி கண்மாகரையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கல்வெட்டை தொல்லியல் குழு ஆய்வு செய்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, இரண்டு அடி நீளமுள்ள அந்தக் கல்வெட்டில் ஏழு வரிகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
அந்த வரிகள் நிறைவடையும் இடத்தில் ஒரு பூரணகும்பமும் அதன் இரு பகுதிகளில் குத்து விளக்குகளும் காணப்படுவதாக அவர் கூறினார்.
இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறிய முடிவதாகக் குறிப்பிட்ட அவர், கல்வெட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள வண்ணக்க நல்லூர் குளக்கரையில் வாழ்ந்த சீயர் என்பவர் மக்களுக்கு நல்வாழ்வுக்கான வேதநெறியைக் கற்பித்துப் பாதுகாத்து வந்துள்ளார் என்பதையும் அறிய முடிவதாகத் தெரிவித்தார்.
அப்பகுதியிலிருந்து மேலும் இரண்டு கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அப்பகுதி வண்ணக்க நல்லூர் என்று அழைக்கப்பட்டிருப்பது தெரிய வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகம் முழுவதும் கிராமங்களில் காவல் தெய்வமாக உள்ள அய்யனார், பூரணா, புஷ்பகலா ஆகிய தேவியருடனும் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், இங்குள்ள அய்யனார், தேவியர் இன்றி தனித்து உத்குடி ஆசனத்தில் (அமர்ந்த நிலை) கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
அய்யனார் சிற்பம் 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றார் புலவர் காளிராசா.

