தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளிர்க்காக ரூ.177 கோடியில் 14 புதிய தோழி விடுதிகள்

2 mins read
0e06e449-7763-42c3-a3a8-b9abad0ca407
மூன்று புதிய தோழி விடுதிகளைக் காணொளி வழியாகத் திறந்து வைக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிர் வசதிக்காக ரூ.176.93 கோடி (S$26.66 மில்லியன்) மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதிகள் கட்டுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (மே 21) அடிக்கல் நாட்டினார்.

சென்னை பரங்கிமலை, ஒசூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ரூ.38.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய தோழி விடுதிகளையும் காணொளி வழியாக அவர் திறந்துவைத்தார். அவ்விடுதிகளில் 448 படுக்கை வசதிகள் அமைந்துள்ளன.

தங்கள் சொந்த ஊர்களைவிட்டு பிற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து பணிபுரியும் பெண்களுக்காக கட்டுப்படியாகும் கட்டணத்தில் தங்குமிட வசதிகளை ‘தோழி விடுதிகள்’ வழங்குகின்றன.

அவ்விடுதிகள் அங்க அடையாள (பயோமெட்ரிக்) உள்நுழைவு, 24 மணிநேரப் பாதுகாப்பு, வைஃபை இணையச் சேவை, கண்காணிப்புப் படக்கருவி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான உணவு, தொலைக்காட்சி, சுடுநீர், சலவை இயந்திரம், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன.

இப்போது சென்னை, திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் 16 தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றின்மூலம் 1,380க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் மேலும் 14 தோழி விடுதிகளைக் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

அவற்றின்மூலம் ஏறத்தாழ 2,000 பெண்கள் பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்