சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்ப 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
சனி, ஞாயிறு (ஏப்ரல் 25, 26) ஆகிய இரு நாள்களுக்கு மாநிலத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
வாக்களித்தவர்கள் சென்னை மற்றும் இதர நகரங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாகப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தேர்தல் சமயத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தற்போது பேருந்துச் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன
ஏப்ரல் 21 முதல் 23 வரை இயக்கப்பட்ட சேவைகளைவிட, தற்போது கூடுதலாக 4,339 பேருந்துகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்புக்கு முந்தைய நாள்களில் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் போதிய பேருந்துகள் இல்லாததால் நூற்றுக்கணக்கானோர் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
சிலர் வாக்குப்பதிவு நேரத்திற்குள் ஊர் போய்ச் சேர முடியுமா என்ற கவலையில் லாரிகளில் ஏறியும் அதிகக் கட்டணம் கொடுத்துத் தனியார் வாகனங்களிலும் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த விவகாரம் அரசியல் ரீதியாகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குறைகூறலுக்கு ஆளானது.
இந்நிலையில், சனிக்கிழமை பயணம் செய்ய 19,676 பேரும் ஞாயிற்றுக்கிழமைப் பயணத்துக்கு 47,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்வோர் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டி பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

