ரூ.499க்கு 15 மளிகைப் பொருள்கள்: ‘அமுதம் பிளஸ்’ திட்டம் தொடக்கம்

ரூ.499க்கு 15 மளிகைப் பொருள்கள்: ‘அமுதம் பிளஸ்’ திட்டம் தொடக்கம்

2 mins read
fc248e6c-f380-4460-8712-158613678bc8
சென்னை கோபாலபுரத்தில் செயல்படும் அமுதம் அங்காடியில் 15 மளிகைப்பொருள்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் அர. சக்கரபாணி தொடங்கி வைத்தார். - படம்: ஊடகம்

சென்னை: ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 15 மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.499க்கு வழங்கப்படும் ‘அமுதம் பிளஸ்’ திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 22) தொடங்கிவைத்தார். மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கடலை, பெருங்காயத்தூள் ஆகிய பொருள்கள் இதில் அடங்கும்.

தரமான பொருள், நியாயமான விலை என்ற கோட்பாட்டுடன் இயக்கப்பட்டுவரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழக முதல்வரின் ஆணைப்படி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்பட்டு துணை முதல்வர் மற்றும் உணவு, உணவுப்பொருள் வழங்கல் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. லாப நோக்கமின்றி தரமான பொருள்கள் நியாயமான விலையில் பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக வரும் பண்டிகைக் காலங்களைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 15 வகையான மளிகைப்பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பின் விற்பனையினை ‘அமுதம் பிளஸ்’ மளிகைத்தொகுப்பு என்ற பெயரில் சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் உணவு, உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த மளிகைத்தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும் அடையார், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. அமுதம் பிளஸ் மளிகைத்தொகுப்பு விற்பனைத் தொடக்க விழாவில் அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்