சென்னை: தமிழகத்தின் தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (ஏப்ரல் 7) பேரவையில் 110 விதியின் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்,” என்றார் மு.க.ஸ்டாலின்.
இந்தியப் பிரதமர் அண்மையில் இலங்கை சென்றபோது, தமிழக மீனவர் விடுதலை, கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
“மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுடன் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
“மத்திய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது,” என்று ஸ்டாலின் கூறினார்.
60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன் பகுதியிலும், ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் குந்துக்கல் பகுதியிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே தாம் அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த சில புதிய வாழ்வாதாரத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
“கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய திட்டம், சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய திட்டம், மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

