சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலைக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 16) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபூ நிறுவனம் இந்த ஆலையை அமைக்கிறது. இதன் மூலம் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.
“கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும். டிசம்பருக்குள் பணிகள் முடிந்து, உற்பத்தி தொடங்கப்படும். இங்கு நேரடியாக 25,000 பேருக்கு வேலை அளிக்கப்படும். இதில் 85%, குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்,” என்று நிறுவனத்தின் தமிழகப் பிரிவு அதிகாரி அகில் கூறினார்.
ஹாங் ஃபூ நிறுவனம், தோல் அல்லாத காலணி, விளையாட்டுக்கான காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இருபதுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட பன்னாட்டு குழுமமான இது, உலகளவில் இரண்டாவது பெரிய காலணி உற்பத்தி நிறுவனமாக உள்ளது.
நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டர் ஆர்மர் போன்ற அனைத்துலக அளவில் வணிகமுத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளையும் இது வழங்கி வருகிறது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளியல் மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியலாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.