சென்னை: விரைவுரயில் வழியாக டெல்லியிலிருந்து சென்னை நடுவண் ரயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட 1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியிலிருந்து சென்னை சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரைவுரயிலில் பல மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட கெட்டுப்போன இறைச்சி, ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது.
தகவலறிந்து அங்கு விரைந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அம்மூட்டைகளைச் சோதனை செய்தனர். அவற்றில் மொத்தம் 1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி இருந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் ஆட்டிறைச்சியும் கோழி இறைச்சியும் அடங்கும்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர், “அண்மைக் காலமாகவே மற்ற மாநிலங்களிலிருந்து சென்னைக்குக் கெட்டுப்போன இறைச்சி கொண்டுவரப்படுவது தொடர்கிறது. அவற்றைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்துவருகிறோம். இவ்வாண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏறக்குறைய 600 கிலோ கெட்டுப்போன இறைச்சியைக் கைப்பற்றினோம். அதனை அனுப்பியவர் யார் என்பது தெரியவில்லை. அதேபோல், சென்னை நடுவண் ரயில் நிலையத்தில் தற்போது பறிமுதல் செய்துள்ள இறைச்சியையும் அனுப்பியவர் விவரம் தெரியவில்லை,” என்று சொன்னார்.
இறைச்சி விரைவில் கெட்டுப்போகக்கூடிய உணவு என்றும் அதனை முகவரி உள்ளிட்ட உரிய விவரங்கள் இன்றி அனுப்பக்கூடாது என்றும் அவ்வதிகாரி அறிவுறுத்தினார்.


