தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் 16 ஆயிரம் டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்

2 mins read
6b97690c-7dfe-48b4-b326-37e45f8a5f9f
சென்னையில் சட்டவிரோதமாக பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு எதிராக சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சென்னை மாநகரைச் சேர்ந்த பகுதிகளில் மட்டும் கடந்த மூன்று வாரங்களில் 16,370 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும் வகையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதையடுத்து, சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் குப்பைகள், கட்டடக் கழிவுகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

மாநகரப் பகுதியைச் சேர்ந்த 15 மண்டலங்களிலும் சாலைகள், தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற, மேயர் ஆர்.பிரியா கடந்த ஜனவரி 7ஆம் தேதி தீவிர தூய்மைப் பணித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வரையிலான 3 வாரங்களில் 16,370 டன் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கட்டட கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளும் குப்பைகளும் சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவ்வகையில், சென்னையில் கட்டடக் கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட 15 இடங்களை மாநகராட்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. இருந்தும் கட்டடக் கழிவுகளை கட்டுமான நிறுவனங்கள் பொது இடங்களில் கொட்டி வருவது அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்