அமைந்தகரை: சென்னையில் தங்களது வீட்டில் பணிபுரிந்த 16 வயதுச் சிறுமியை அடித்துக் கொன்று, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு, வாசனை திரவியங்களைத் தெளித்து விட்டுச் சென்றதாகக் கூறப்படும் ஒரு குடும்பத்தினரைக் கூண்டோடு கைது செய்துள்ளது காவல்துறை.
சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். இவரது மனைவி நபியா.
இவர்களது வீட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலை செய்துவந்தார்.
பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் முகமது நவாஷ், தங்களது பணிப்பெண் இறந்துவிட்டதாக வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 1) தனது வழக்கறிஞர் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, நவாஷின் வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குளியலறையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
உடலில் ஆங்காங்கே காயங்களும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்களும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நவாஷிடம் விசாரித்தபோது, சிறுமியை நவாஷும் அவரது மனைவியும் தொடர்ந்து அடித்து துன்புறுத்திய விவரம் தெரிய வந்தது.
தீபாவளியன்று அதுபோல் தாக்கியபோது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது உடலைக் குளியலறையில் போட்டுவிட்டு நண்பரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து முகமது நவாஷ், அவரது மனைவி, நண்பர் லோகேஷ் உட்பட ஆறு பேரை காவலர்கள் கைது செய்தனர்.
லோகேஷ் மீது விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த சிறுமி, தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் இருந்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு நவாஷ் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர் அங்கேயே தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு முறையாகச் சம்பளம் கொடுக்கவில்லை என்றும் சிறுமியை அவரது தாயார் பார்க்க நவாஷ் அனுமதிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.