காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் 16,000 காவல்துறையினர்

2 mins read
6e5175cf-2951-4479-bc6c-3c75781d1a23
மெரினா கடற்கரை. - படம்: தி சௌத் ஃபர்ஸ்ட்.காம்

சென்னை: காணும் பொங்கல் தினத்தில் சென்னையில் 16 ஆயிரம் காவல்துறையினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட உள்ளனர்.

சென்னை மெரினா கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னைவாசிகள் மாநகரின் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.

கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலாத்தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இதையடுத்து, மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க சென்னை காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கிறது.

16,000 காவல்துறையினருடன் 1,500 ஊர்க்காவல் படையினரும் ஒருங்கிணைந்துச் செயல்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மெரினா கடற்கரையில் மட்டும் மூன்று லட்சம் பேர் திரளக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு மட்டும் காவல்துறை மூன்று தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.

மேலும் எட்டு ‘ஆம்புலன்ஸ்’ வாகனங்கள், தீயணைப்பு வீரர்களுடன் கூடிய இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார்நிலையில் இருப்பர்.

கடற்கரையில் 13 காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இக்கோபுரங்களில் மூன்று பேர் கொண்ட காவல் குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடத்தப்படும்.

தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போகும் பட்சத்தில், அவர்களை உடனடியாக மீட்க ஏதுவாக குழந்தைகளின் கையில் அடையாளப் பட்டை கட்டிவிடப்படும்.

அந்தப் பட்டையில் குழந்தை, பெற்றோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண் ஆகியவை எழுதப்பட்டிருக்கும்.

மேலும், மெரினா கடற்பகுதியில் நான்கு ஆளில்லா புதிய ரக வானூர்திகளைக் கொண்டு கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசின் சுற்றுலாப் பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா உட்பட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்