சென்னை: மெத்த பெட்டமைன் என்னும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மாதவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், கார்த்திக் ஆகிய இருவரை காவல்துறை கடந்த 2024 டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்தது. அவர்களிடம் இருந்து ரூ.17 கோடி மதிப்புள்ள 17.815 கிலோ கிராம் போதைப்பொருள் கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துகளும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
விசாரணையில், வெங்கடேசன் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர். ஏழு ஆண்டு தண்டனையை அனுபவித்த நிலையில், 2021ல் விடுதலையானது தெரியவந்தது.
கொடுங்கையூரில் உள்ள உறவினர் பிரபு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோருடன் இணைந்து, மியன்மாரில் இருந்து மணிப்பூர் வழியாக, மெத்த பெட்டமைன் தயாரிக்கும் மூலப்பொருள்களைச் சென்னைக்கு கடத்தி வந்து, போதைப்பொருள் தயாரித்து விற்று வந்ததும் கண்டறியப்பட்டது.
வெங்கடேசன் கொடுத்த தகவலில், 2024 டிசம்பர் 30ஆம் தேதி வடகரையில், 16 கிலோ மெத்த பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீது, லாரன்ஸ் ஆகியோரிடமிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை, 128 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
வெங்கடேசனை விசாரித்த பின்பு, வெங்கடேசனுக்கு பக்கபலமாக இருந்த அவரது மனைவி ஜான்சி மெரிடா மற்றும் மாதவரம் சரத்குமார், விழுப்புரம் லட்சுமி நரசிம்மன், அருப்புக்கோட்டை முருகன் உள்ளிட்ட 6 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதும், மெத்த பெட்டமின் போதைப்பொருளை பல மாநி லங்கள் வழியாக இடைத்தரகர்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து நட்சத்திர விடுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள், போதைக்கு அடிமையானவர் களிடம் விற்பனை செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.