17% ஆக குறைந்துள்ள பேறுகால உயிரிழப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறை

17% ஆக குறைந்துள்ள பேறுகால உயிரிழப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறை

1 mins read
eb5c60cc-e942-44bd-aa49-091505de12ae
கோப்புப் படம் - ஊடகம்

சென்னை: தமிழகத்தில் பேறுகாலத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் 17 விழுக்காடாக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதிக அளவிலான ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று, இதய நல பாதிப்புகள்தான் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுப்ரியா சாஹு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 45.5 என்ற விகிதத்தில் பேறுகால மரணங்கள் நிகழ்கின்றன.

“தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் இருந்து நவம்பா் மாதம் வரை பேறுகால உயிரிழப்புகள் 17 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அந்த காலகட்டத்தில் லட்சத்துக்கு 39.46 என்ற அளவில் உயிரிழப்புகள் இருந்தன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 47.29 என இருந்தது.

“அதேபோன்று பிரசவ சிகிச்சைக்காக கா்ப்பிணிகளைக் கொண்டு செல்லும்போது, வழியில் நேரிடும் உயிரிழப்புகள் லட்சத்துக்கு 15ஆக இருந்தது தற்போது 6ஆக குறைக்கப்பட்டுள்ளது.

“சிறப்பு செயலாக்கக் குழுக்களை அமைத்து பணியாற்றியது, மகப்பேறு தொடர்பான அவசரகால கட்டுப்பாட்டு அறைகளைத் தொடங்கியது, 108 அவசர சிகிச்சை சேவை உடனுக்குடன் கிடைப்பதை உறுதிப்படுத்தியது, முன்கூட்டியே பிரசவ சிகிச்சைகளைத் திட்டமிட்டது ஆகியவை இதற்கு முக்கியக் காரணம்.

“எதிா்வரும் ஆண்டில் பேறுகால உயிரிழப்புகள் இன்னும் அதிகம் குறையும் என எதிா்பாா்க்கிறோம்,” என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்