சென்னை: பத்தொன்பது வயதில் சென்னையைச் சேர்ந்த இளையர் மஹ்மூத் அக்ரம், 400 மொழிகளில் படித்து, எழுதி, தட்டச்சு செய்து அசத்துகிறார்.
இவரால் 46 மொழிகளில் சரளமாகப் பேச இயலும். எட்டு வயதில் பன்மொழித் தட்டச்சுக்கான உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.
மஹ்மூத் அக்ரம் ஒரு வாரத்துக்குள் ஆங்கில எழுத்துகளையும் மூன்று வாரங்களில் தமிழ் எழுத்துகளையும் கற்றுக்கொண்டுவிட்டார்.
10 வயதில் 20 மொழிகளில் தேசிய கீதம் எழுதியது, 12 வயதில் 400 மொழிகளில் தேர்ச்சி பெற்றது ஆகியவையும் இவரது உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஏசியாநெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தியாவில் மொழிகளைக் கற்பிக்கும் பள்ளி கிடைக்காததால், இணையம் வழி படிக்கத் தொடங்கிய அக்ரமுக்கு, ஆஸ்திரியாவின் டானூப் அனைத்துலகப் பள்ளியில் உதவித்தொகை கிடைத்தது.
தற்போது இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், ஆங்கில இலக்கியம், அனிமேஷன் (அழகப்பா பல்கலை) என மூன்று பட்டப்படிப்புகளை மேற்கொண்டுள்ளார் அக்ரம்.
தனது மொழித் திறனைப் பேணுவதற்காக, சமூக ஊடகங்களை ரஷ்ய மொழியில் பயன்படுத்துகிறார். டேனிஷ் குறும்படங்களைப் பார்க்கிறார். ஃபேஸ்புக்கில் அரபு மொழி காணொளிகளைப் பார்க்கிறார்.
தனது தாய்மொழி தமிழ் என்பதைப் பெருமையுடன் குறிப்பிடும் அக்ரம், திருக்குறள் போன்ற சிறந்த தமிழ் நூல்களை அதிக எண்ணிக்கையிலான மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மொழிப் பேராசிரியராக வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் மொழிகளின் முக்கியத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்பதும்தான் இவரது வாழ்க்கை லட்சியம்.
மஹ்மூத் அக்ரமின் தந்தை ஷில்பியும் பன்மொழிகளை அறிந்தவர். 16 மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர்தான், தனது மகனுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்.