சென்னை: அவசர சிகிச்சை வாகனத்தின் மூலம், கடந்த நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில், சாலை விபத்துகளில் சிக்கிய 2.93 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, ‘108 ஆம்புலன்ஸ்’ சேவை செயல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 1,353 அவசர சிகிச்சை வாகனங்கள், பச்சிளங் குழந்தைகளுக்கான 65 வாகனங்கள், 41 இருசக்கர வாகனங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
இந்தத் திட்டத்தின்கீழ் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நாள்தோறும் அவசர வாகனச் சேவை தொடர்பாக இந்த ஊழியர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகளைக் கையாள்கிறார்கள்.
இந்நிலையில், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்த 11.46 நிமிடங்களுக்குள் அவசர சேவை வாகனம் சம்பவ இடத்திற்குச் சென்றுவிடும் என்றும் கடந்த நிதியாண்டில் சாலை விபத்தில் சிக்கிய 2.93 லட்சம் பேர் உடனடியாக மீட்கப்பட்டதில், பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டனர் என்றும் அவசர சேவைப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“மேலும், 2.79 லட்சம் கர்ப்பிணிகள் 9.66 லட்சம், மலைவாழ் மக்கள் 70,181 பேர், பழங்குடியினர் 16.10 லட்சம் பேர் இச்சேவையால் பயனடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.